மும்பை அருகே கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு - மீட்புப்பணிகள் நிறைவு
மும்பை அருகே கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் இருந்து மேலும் 6 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
மும்பை,
மராட்டிய தலைநகர் மும்பையை அடுத்த தானே மாவட்டம் பிவண்டி வால்பாடா பகுதியில் வார்தமான் காம்பவுண்டில் உள்ள 3 மாடி குடோன் கட்டிடம் நேற்று முன்தினம் மதியம் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த கட்டிடத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என கூறப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நவீன உபகரணங்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதலில் இடிபாடுகளில் சிக்கி உதவிகேட்டு சத்தம் போட்டவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். நேற்று இரவு வரை மீட்பு படையினர் குழந்தைகள் உள்பட சுமார் 10 பேரை உயிருடன் மீட்டனர்.
லேசான காயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் பெண் உள்பட 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
இந்தநிலையில் கட்டிடம் இடிந்து சுமார் 20 மணி நேரத்துக்கு பிறகு நேற்று காலை 8 மணியளவில் மீட்பு படையினர் இடிபாடுகளில் இருந்து சுனில் பிசல்(வயது42) என்ற தொழிலாளியை உயிருடன் மீட்டனர். அவர் சிகிச்சைக்காக பிவண்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதேபோல நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை மேலும் 6 பேர் இடிபாடுகளில் இருந்து பிணமாக மீட்கப்பட்டனர். இதனால் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்து உள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் கட்டிட உரிமையாளர் இந்திரபால் பாட்டீல் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடம் 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும்.
கட்டிடத்தில் சமீபத்தில் செல்போன் கோபுரம் வைக்கப்பட்டுள்ளது. அந்த கோபுரத்தின் எடை தாங்க முடியாமல் கட்டிடம் இடிந்து விழுந்து இருக்கலாம் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.