அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பாரத் பந்த் : டெல்லியில் ரெயில்கள் ரத்து
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்து இருந்தன.
புதுடெல்லி,
முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்துக்கு நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த திட்டத்தை திரும்ப பெறக்கோரி பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது.இதைப்போல அக்னிபத் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இந்த திட்டம் திரும்ப பெறப்பட மாட்டாது என மத்திய அரசின் ராணுவ நலத்துறை கூறியுள்ளது.
இதனிடையே, அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்து இருந்தன. இதனால், நாடு முழுவதும் முக்கிய ரெயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 80 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லி - என்.சி.ஆர் பகுதிகளில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்ததால், இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்து இருந்தனர்.