மோடி முன்னிலையில் பதவியேற்பு.. ராஜஸ்தான் முதல்-மந்திரி ஆனார் பஜன்லால் சர்மா
வித்யாதர் நகர் எம்.எல்.ஏ. தியா குமாரி, துடு தொகுதி எம்.எல்.ஏ. பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 115 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 69 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, ஆட்சியமைக்கும் பணிகளை பாஜக தொடங்கியது.
முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல் முறை எம்.எல்.ஏ.வான பஜன்லால் சர்மா (வயது 57) சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-மந்திரி) தேர்வு செய்யப்பட்டார்.
வித்யாதர் நகர் எம்.எல்.ஏ. தியா குமாரி, துடு தொகுதி எம்.எல்.ஏ. பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாகவும், அஜ்மீர் வடக்கு தொகுதி எம்எல்ஏ வாசுதேவ் தேவ்னானி சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாஜக அரசு பதவியேற்பு விழா, ஜெய்ப்பூரில் உள்ள ராம்நிவாஸ் கார்டனில் இன்று நடைபெற்றது. விழாவில் பஜன்லால் சர்மா முதல்-மந்திரியாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதேபோல் தியா குமாரி, பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர். பஜன்லால் சர்மா தனது 57வது பிறந்தநாளில் முதல்-மந்திரியாக பதவியேற்றிருக்கிறார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் காங்கிரசின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் மற்றும் மத்திய மந்திரிகள், பாஜக ஆளும் மாநில முதல்-மந்திரிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
புதிய முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரிகளுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.