நாட்டில் பி.எப்.ஐ. அமைப்புக்கு விரைவில் தடை; மத்திய மந்திரி ஷோபா பேட்டி
நாட்டில் பி.எப்.ஐ. அமைப்பினருக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஷோபா தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு;
மத்திய மந்திரி ஷோபா
மத்திய மந்திரி ஷோபா, நேற்று சிக்கமகளூருவுக்கு வந்தார். சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேயில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர், பள்ளி மாணவ-மாணவிகளுடன் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டார். இதையடுத்து மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
பின்னர் உண்டு, உறைவிட பள்ளி மாணவ-மாணவிகளிடம் நலம் விசாரித்த அவர், குறைகளை கேட்டறிந்து கொண்டார். பின்னர், சிக்கமகளூரு அருகே கசபா கிராமத்தில் அரசு பள்ளியின் ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் மத்திய மந்திரி ஷோபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து
பள்ளி மாணவ-மாணவிகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு தான் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து. நானும் சிறுவயதில் அனைத்து விளையாட்டுகளிலும் கலந்துகொள்வேன். தற்போதுள்ள மாணவர்கள் செல்போனில் மூழ்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை மாற வேண்டும். மாணவர்கள் எப்போதும் செல்போன் விளையாட்டில் கவனம் செலுத்தாமல், கள விளையாட்டில் கவனம் செலுத்த ேவண்டும். படிப்பிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை
பி.எப்.ஐ. அமைப்பினா் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின்பேரில் நாடு முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பி.எப்.ஐ. அமைப்பினரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். என்.ஐ.ஏ. சோதனையை திசை திருப்பும் வகையில் கேரளாவில் வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதனை மக்கள் கவனித்து வருகிறார்கள். இவை அனைத்துக்கும் முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.
நாட்டில் விரைவில் பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பி.எப்.ஐ. அமைப்பினா் பயங்கரவாதம் மற்றும் தேசத்துரோக செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் என்.ஐ.ஏ. அமைப்பினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
பயப்பட தேவையில்லை
தொடர் கனமழை காரணமாக காபி பயிர்கள் நாசமாகி பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசி மத்திய அரசிடம் இருந்து காபி தோட்ட உரிமையாளர்களுக்கு நிவாரணம் பெற்று கொடுக்கப்படும். காபி மண்டல வாரிய தலைவர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் விரைவில் அவரை பணி இடைநீக்கம் செய்து, வேறொருவரை நியமிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
சிக்கமகளூரு மாவட்டத்தில் நிரந்தரமாக காட்டு யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், புலிகள் அட்டகாசம் இருந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் காபி தோட்ட தொழிலாளர்கள் பயப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.