இதையாவது நிறைவேற்றுவார்கள் என நம்பலாம்.. உள்துறை மந்திரியின் அறிவிப்புக்கு மெகபூபா வரவேற்பு
எதையுமே செய்யாமல் இருப்பதைவிட தாமதமாக செய்வது நல்லது, ஆனால், பா.ஜ.க.வின் முந்தைய வெற்று வாக்குறுதிகள் போன்று இல்லாமல் இருக்க வேண்டும் என மெகபூபா தெரிவித்தார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைமுறையில் உள்ள ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார். மேலும், பாதுகாப்பு படைகளை படிப்படியாக திரும்ப பெற்று, சட்டம் ஒழுங்கை காவல்துறையிடம் ஒப்படைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாக கூறினார்.
உள்துறை மந்திரியின் இந்த அறிவிப்பை, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், பி.டி.பி. கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை படிப்படியாக அகற்றுவதுடன், மிக கொடூரமான ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என பி.டி.பி. கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தபோதே இதை வலியுறுத்தினோம். கூட்டணி செயல்திட்டத்தின் முக்கிய பகுதியாகவும் இது இருந்தது.
எதையுமே செய்யாமல் இருப்பதைவிட தாமதமாக செய்வது நல்லது. ஆனால், பா.ஜ.க.வின் முந்தைய வெற்று வாக்குறுதிகள் போன்று இல்லாமல் இருக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இது பெரும் நிம்மதியை அளிக்கும் என்பதால், இந்த விஷயத்திலாவது அவர்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று நம்பலாம். தற்போது சிறைகளில் வாடும் பத்திரிகையாளர்களையும், ஆயிரக்கணக்கான காஷ்மீரி சிறுவர்களையும் எந்தவித குற்றச்சாட்டுகளோ அல்லது வழக்குகளோ இல்லாமல் விடுதலை செய்வதன் மூலம் இந்த நல்ல விஷயத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தொடங்கலாம்.
இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்தார்.