பெங்களூரு: காங்கிரஸ் போராட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் - ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு


பெங்களூரு: காங்கிரஸ் போராட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் - ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு
x

காங்கிரஸ் நடத்திய மாபெரும் பேரணி மற்றும் போராட்டத்தால், பெங்களூரு மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெங்களூரு,

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மூன்று தினங்களாக தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் மற்றும் பேரணி நடத்தினர். பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மனு மற்றும் புகார் கடிதம் கொடுக்க, பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முதல் ராஜ்பவன் வரை பேரணி நடந்தது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் நடத்திய மாபெரும் பேரணி மற்றும் போராட்டத்தால், பெங்களூரு மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது, "பெங்களூரு பிரீடம் பூங்கா பகுதியை தவிர வேறு எங்கும் போராட்டம் நடத்தக் கூடாது என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. நாங்கள் அதை அவர்களிடம் தெரிவித்தோம்.

அவர்கள் போராட்டத்தைப் பற்றி எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக அனுமதி கேட்டு சமர்ப்பித்தார்கள். ஆனால் நாங்கள் அதை நிராகரித்தோம்.இன்று காலையிலும் அவர்களிடம் தெரிவித்தோம். இதையும் மீறி, அவர்கள் போராட்டம் மற்றும் பேரணி தொடர்ந்தால், அவர்களை தடுப்புக் காவலில் எடுப்போம்" எனத் தெரிவிக்கப்பட்டது.


கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கூறுகையில், "இந்த எதிர்ப்பு போராட்டம் எங்கள் உரிமை, நாங்கள் நீதிக்காக போராடுவோம். அமலாக்கத் துறை பாஜக தலைவர்கள் மீது வழக்குகளை எடுக்கவில்லை, அவர்கள் காங்கிரஸை மட்டுமே துன்புறுத்துகிறார்கள்" என்றார்.


Next Story