தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில், இன்று முதல் பெங்களூரு- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பையப்பனஹள்ளியில் இருந்து இயக்கம்


தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில், இன்று முதல் பெங்களூரு- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பையப்பனஹள்ளியில் இருந்து இயக்கம்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பெங்களூரு- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயங்குகிறது.

பெங்களூரு:

சிட்டியில் இருந்து மாற்றம்

பெங்களூருவில் வசிக்கும் தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்களின் வசதிக்காக பெங்களூரு-நாகர்கோவில் இடையே கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்படும் அந்த ரெயில் மறுநாள் காலையில் திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலை சென்றடையும். அதுபோல், நாகர்கோவிலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணியளவில் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தை வந்து சேரும்.

இந்த நிலையில், பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து அதிக ரெயில்கள் இயக்கப்படுவதால், அங்கு ரெயில்களை நிறுத்தி வைக்க இடப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ைபயப்பனஹள்ளியில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கட்டப்பட்டுள்ள சர் எம்.விஸ்வேசுவரய்யா ரெயில் முனையத்திற்கு பல்வேறு ரெயில்கள் மாற்றப்பட்டு இருக்கிறது. அதுபோல், சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலும் பையப்பனஹள்ளி புதிய ரெயில் முனையத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

இன்று முதல் பையப்பனஹள்ளியில் இருந்து...

அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு செல்கிறது. அதுபோல், நாகர்கோவிலில் இருந்து பெங்களூருவுக்கு வரும் போதும் பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்திலேயே அந்த ரெயில் நிறுத்தப்படும். எனவே நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக தமிழ்நாட்டுக்கு செல்லும் பயணிகள் பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து பையப்பனஹள்ளிக்கு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றப்படுவதற்கு பெங்களூரு நகரில் வசிக்கும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story