முன்னாள் கவுன்சிலரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கு: பெங்களூரு மாநகராட்சி செயல்படை பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது


முன்னாள் கவுன்சிலரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கு:  பெங்களூரு மாநகராட்சி செயல்படை பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது
x

முன்னாள் கவுன்சிலரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பெங்களூரு மாநகராட்சி செயல்படையின் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு: முன்னாள் கவுன்சிலரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பெங்களூரு மாநகராட்சி செயல்படையின் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ரூ.3 லட்சம் லஞ்சம்

பெங்களூரு மாநகராட்சி செயல்படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பேபி ஒலேகர். இந்த நிலையில் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் லட்சுமி நாராயணாவுக்கு உரமாவு அக்ரா பகுதியில் ஒரு நிலம் உள்ளது. அந்த நிலம் தொடர்பாக சில பிரச்சினையும் இருந்தது. இந்த நிலையில் அந்த நிலப்பிரச்சினையை முடித்து வைக்கும்படி பேபி ஒலேகரிடம், லட்சுமி நாராயணா கேட்டு உள்ளார்.

அப்போது நிலப்பிரச்சினையை முடித்து வைக்க ரூ.3 லட்சம் லஞ்சம் தரும்படி பேபி ஒலேகர் கேட்டுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட லட்சுமி நாராயணா முதல் தவணையாக ரூ.1 லட்சம் தருவதாக கூறி இருந்தார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத லட்சுமி நாராயணா, பேபி ஒலேகர் மீது ஊழல் தடுப்பு படையில் புகார் அளித்து இருந்தார்.

பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது

அப்போது லட்சுமி நாராயணாவுக்கு சில அறிவுரைகள் கூறிய ஊழல் தடுப்பு படையினர் அவரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.1 லட்சத்தை கொடுத்து அனுப்பினர். இந்த நிலையில் நேற்று பேபி ஒலேகரை அவரது அலுவலகத்தில் சந்தித்த லட்சுமி நாராயணா ரூ.1 லட்சத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படையினர் பேபி ஒலேகரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கைதான பேபி ஒலேகர் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கைதான பேபி ஒலேகர் கடந்த 2013-ம் ஆண்டு ராய்ச்சூரில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த போது குடிபோதையில் தகராறு செய்த ஒருவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று லத்தியால் பலமாக தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது பணி இடைநீக்கத்தை கண்டித்து ராய்ச்சூர் மக்கள் நடத்திய போராட்டத்தால் அவரது பணி இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story