பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் தங்க சங்கிலி பறிமுதல்
சார்ஜாவில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலிகளை சுங்கத்துறை அதிகாரிகளும், போலீசாரும் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
தேவனஹள்ளி:
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 12-ந் தேதியில் இருந்து 2-வது முனையம் செயல்பட தொடங்கியது. அந்த 2-வது முனையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டில் இருந்து பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சார்ஜாவில் இருந்து 2-வது முனையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பெண்ணின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, அந்த பெண்ணை தனியாக அறைக்கு அழைத்து சென்று பெண் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது பெண்ணிடம் 377 கிராம் எடையுள்ள 2 தங்க சங்கிலிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும். இதையடுத்து, அந்த பெண் கைது செய்யப்பட்டார். அந்த பெண் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விமான நிலையத்தின் 2-வது முனையம் செயல்பட தொடங்கிய பின்பு நடந்த முதல் தங்க கடத்தல் வழக்கு என போலீசார் தெரிவித்துள்ளனர்.