மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா ஆஸ்பத்திரியில் அனுமதி
மூச்சுத் திணறல் காரணமாக மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரியான புத்ததேவ் பட்டாச்சார்யா (79) மூச்சுத் திணறல் காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆஸ்பத்திரியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரியான புத்ததேவ் பட்டாச்சார்யா ஜூலை 29, 2023 அன்று குறைந்த சுவாச பாதை நோய்த்தொற்று மற்றும் வகை II சுவாசக் கோளாறு ஆகிய பிரச்னைகள் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது ஆக்ஸிஜன் செறிவு 70 சதவீதமாக மோசமடைந்ததால் சுயநினைவை இழந்துள்ள பட்டாச்சார்யா வெண்டிலேஷனில் வைக்கப்பட்டுள்ளார். தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு அறிக்கை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். அவர் ஹீமோடைனமிக் ரீதியாக நிலையாக உள்ளார். பல்வேறு மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000 முதல் 2011ஆம் ஆண்டு வரை மேற்குவங்காளத்தின் முதல்-மந்திரியாக இருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, 5 தசாப்தங்களுக்கும் மேலாக அரசியல் சேவையாற்றியதன் மூலம் தேசிய அளவில் மிகவும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவராக கருதப்படுகிறார். முதுமை மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியாததால் ஒதுங்கியிருந்த நிலையில் தற்போது அவர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.