பெலகாவியில் இரவோடு, இரவாக நிறுவப்பட்ட சங்கொள்ளி ராயண்ணா சிலையால் பரபரப்பு
மராட்டியர்கள் அதிகம் வாழும் பகுதியில் இரவோடு, இரவாக சங்கொள்ளி ராயண்ணா சிலை நிறுவப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெலகாவி:
மராட்டியர்கள் அதிகம் வாழும் பகுதியில் இரவோடு, இரவாக சங்கொள்ளி ராயண்ணா சிலை நிறுவப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாநில பிரச்சினை
கர்நாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டம் கர்நாடகம்-மராட்டிய மாநில எல்லையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு மராட்டிய மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி மொழி பிரச்சினை தொடர்பாக கலவரங்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் பெலகாவியை, மராட்டிய மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரம் இருமாநிலங்களிடையே தீராத பிரச்சினையாக உள்ளது. இந்த நிலையில் பெலகாவி டவுன் ஜிஜமடா சவுக் பகுதியில் மர்மநபர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவோடு, இரவாக சங்கொள்ளி ராயண்ணாவின் சிலையை நிறுவினர்.
இதுகுறித்து அறிந்த அந்த பகுதியினர் சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் உதவி போலீஸ் கமிஷனர் சேகர், சம்பவ இடத்திற்கு வந்தார். இதுகுறித்து அவர் விசாரணை நடத்தினார். அப்போது இரவோடு, இரவாக சங்கொள்ளி ராயண்ணாவின் சிலையை வேண்டுமென்றே நிறுவியது தெரிந்தது.
கூடுதல் போலீசார்
அதை அந்த பகுதியில் வசித்து வரும் கன்னட அமைப்பினர் நிறுவியதும் தெரிந்தது. இதற்கிடையே மராட்டிய மக்கள் சிலர், அந்த பகுதியில் வீரசிவாஜியின் சிலையை உடனடியாக நிறுவ வேண்டும் என கோரி பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.