கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜ.க.வினர் நடத்திய போராட்டத்தை கலைத்த தேனீக்கள்!
தேனீக்களின் திடீர் தாக்குதலால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓடத்தொடங்கினர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த பா.ஜ.க. எம்.பி. முனிசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க. தொண்டர்கள் கூடினர்.
இந்த போராட்டம் தொடங்கிய சில நிமிடங்களில், அங்கு மரத்தில் இருந்த தேனீக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொட்டத் தொடங்கின. தேனீக்களின் இந்த திடீர் தாக்குதலால், போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓடத்தொடங்கினர்.
தேனீக்கள் கொட்டியதால் பாதிக்கப்பட்ட முனிசாமி எம்.பி. உள்ளிட்ட பா.ஜ.க.வினர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் தேனீக்கள் விரட்டப்பட்டதை அறிந்து, சிகிச்சைக்குப் பின்பு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முனிசாமி எம்.பி., மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக புகார் கடிதத்தை அளித்தார்.