சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டுக்கு பார் கவுன்சில் ஆதரவு
புகாருக்கு ஆளாகி உள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டுக்கு பார் கவுன்சில் ஆதரவு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக உள்ள லலித், அடுத்த மாதம் 8-ந் தேதி பணி நிறைவு செய்கிறார். அதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு வர இருப்பவர் மூத்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். ஆனால் நீதிபதி சந்திரசூட் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் என்று தன்னை சொல்லிக்கொள்கிற ஆர்.கே.பதான் என்பவர் ஜனாதிபதியிடமும், மற்றவர்களிடமும் புகார் செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் நீதிபதி சந்திரசூட்டுக்கு இந்திய பார் கவுன்சில் தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், "சுப்ரீம் கோர்ட்டு மற்றும் அதன் நீதிபதிகள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் தோல்வி கண்டுள்ள சில தீய சக்திகளை இந்திய பார் கவுன்சில் நிராகரிக்கிறது. வளர்ந்து வரும் இத்தகைய போக்கு உண்மையில் நாட்டுக்கு மிகவும் கவலை அளிக்கும் விஷயம் ஆகும். இது எப்படியும் தடுக்கப்பட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
மேலும், நீதிபதி சந்திரசூட் பற்றி அளிக்கப்பட்டுள்ள 165 பக்க கடிதத்தையும் ஆராய்ந்து விட்டதாகவும், அதில் நீதித்துறை மற்றும் நீதி நிர்வாகத்தின் செயல்பாடுகளில் குறுக்கிடுவதற்கான மோசமான, தீங்கு இழைக்கும் முயற்சியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.