காங்கிரஸ் மூத்த தலைவர் சாமனூர் சிவசங்கரப்பாவுடன், பசவராஜ் பொம்மை ரகசிய சந்திப்பு
காங்கிரஸ் மூத்த தலைவர் சாமனூர் சிவசங்கரப்பாவை, பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ரகசியமாக சந்தித்து பேசினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு:
சாமனூர் சிவசங்கரப்பாவுடன் ரகசிய சந்திப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்திருந்தது. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில், கர்நாடக அரசியலில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உள்ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும், சமரச அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் பா.ஜனதா பொதுச் செயலாளர் சி.டி.ரவி மற்றும் பிரதாப் சிம்ஹா எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு கூறி இருந்தார்கள்.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், லிங்காயத் சமூக தலைவருமான சாமனூர் சிவசங்கரப்பாவை நேற்று முன்தினம் இரவு முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாவணகெரேயில் உள்ள ஓட்டலில் 25 நிமிடங்கள் ரகசியமாக சந்தித்து பேசினார். இந்த ரகசிய சந்திப்பு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
பசவராஜ் பொம்மை விளக்கம்
காங்கிரசுடன், பா.ஜனதா தலைவர்கள் உள்ஒப்பந்தம் செய்திருப்பதாக அக்கட்சியின் முக்கிய தலைவர்களே கூறி இருந்த நிலையில், சாமனூர் சிவசங்கரப்பாவுடன் பசவராஜ் பொம்மை ரகசியமாக சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, சாமனூர் சிவசங்கரப்பாவுடனான ரகசிய சந்திப்பு குறித்து முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது அரசியல் விவகாரங்கள் குறித்து சாமனூர் சிவசங்கரப்பாவுடன் பேசவில்லை என அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நேற்று பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
அரசியல் குறித்து பேசவில்லை
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாமனூர் சிவசங்கரப்பா ஒரு மூத்த தலைவர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் என்னுடைய தூரத்து உறவினர் ஆவார். இதற்கு முன்பு பல முறை நான் அவருடைய வீட்டுக்கு சென்றிருக்கிறேன். அவரும் என்னுடைய வீட்டுக்கு வந்துள்ளார். இது அரசியல் சம்பந்தப்பட்ட சந்திப்பு இல்லை. சாமனூர் சிவசங்கரப்பாவுடனான சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமாக நடந்தது, வேறு ஒன்றும் இல்லை. நான் ஹாவேரி மாவட்டத்தில் இருந்து பெங்களூருவுக்கு வரும்போது தாவணகெரேயில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றிருந்தேன்.
அந்த சந்தர்ப்பத்தில் சாமனூர் சிவசங்கரப்பா தன்னுடைய பேர பிள்ளைகளுக்கான சுப நிகழ்ச்சி குறித்து பேசுவதற்காக வந்திருந்தார். அதே நேரத்தில் நானும் ஓட்டலுக்கு சென்றதால், சாமனூர் சிவசங்கரப்பாவுடன் 10 நிமிடங்கள் மட்டுமே பேசி இருந்தேன். எந்த விதமான அரசியல் விவகாரங்கள் குறித்தும் பேசவில்லை. நட்பு ரீதியான சந்திப்பு வேறு, அரசியல் ரீதியான சந்திப்பு வேறு. என்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் யாருடனும் சமாதானம் செய்து கொள்வதில்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.