'சார்லி-777' படத்தை பார்த்து கண்ணீர் விட்ட பசவராஜ் பொம்மை
‘சார்லி-777’ படத்தை பார்த்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்ணீர்விட்டு கதறி அழுதார்.
பெங்களூரு
கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் ரக்சித் ஷெட்டி நடித்துள்ள படம் 'சார்லி-777'. பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே உள்ள வணிகவளாகத்தில் இருக்கும் தியேட்டரில் நேற்று முன்தினம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 'சார்லி-777' படத்தை பார்த்தார். அவருடன் மந்திரிகள் ஆர்.அசோக், பி.சி.நாகேஸ் ஆகியோரும் அந்த படத்தை பார்த்தார்கள்.
படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திடீரென்று கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-
'சார்லி-777' படத்தில் தெருநாய் பற்றி சிறப்பான கருத்துகள் இடம் பெற்றுள்ளது. நாய்கள் பற்றி மக்களுக்கு இரக்கம் வேண்டும். தெருநாய்களை மக்கள் முடிந்த அளவுக்கு தத்தெடுத்து வளர்க்க வேண்டும். நாய்கள் செய்யும் செயல்களால் மக்களுக்கு சந்தோஷம் ஏற்படுகிறது. இந்த படத்தை பார்த்து மக்கள் விலங்குகள் மீது தனி அன்பு கொள்பவராக மாற வேண்டும். மாநிலத்தில் தெருநாய்களை வளர்க்கவும், அந்த நாய்களை பாதுகாக்கவும் அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. நாய் மற்றும் விலங்குகள் பற்றியும், அவற்றின் அன்பு குறித்தும் நடிகர் ரக்சித் ஷெட்டி, இயக்குனர் கிரண் சிறப்பான படத்தை கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.