வங்கிக் கடன் பாக்கி; பா.ஜ.க. தேசிய செயலாளர் பங்கஜா முண்டேவுக்கு சொந்தமான சர்க்கரை ஆலை ஏலம்
பல கஷ்டங்களையும் மீறி சர்க்கரை ஆலையை நடத்தி வந்ததாக பா.ஜ.க. தேசிய செயலாளர் பங்கஜா முண்டே தெரிவித்துள்ளார்.
மும்பை,
மத்திய அரசின் யூனியன் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ரூ.203.69 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பாக்கியை வசூலிக்க, மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க. தேசிய செயலாளர் பங்கஜா முண்டே குடும்பத்திற்கு சொந்தமான கூட்டுறவு சர்க்கரை ஆலை ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மின்-ஏலம் வருகிற 25-ந்தேதி நடைபெறும் என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் வங்கியின் அகமது நகர் அலுவலகம், ரூ.203.69 கோடி மதிப்பிலான கடன் பாக்கிகளை வசூலிக்க இந்த ஏல நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது தொடர்பாக பங்கஜா முண்டே கூறுகையில், "எனது தந்தை மறைந்த பா.ஜ.க. தலைவர் கோபிநாத் முண்டே, கடினமான சூழலுக்கு இடையே இந்த ஆலையை தொடங்கினார். பல கஷ்டங்களையும் மீறி நான் இதை நடத்தி வந்தேன். கொரோனா காலகட்டத்தில் நிலைமை மிகவும் கடினமாகிவிட்டது. இப்போது ஆலை வங்கியின் வசம் உள்ளது" என்று கூறினார்.