'காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை' - பா.ஜ.க. விளக்கம்


காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை - பா.ஜ.க. விளக்கம்
x

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை என்றும் அவை செயல்பாட்டில்தான் உள்ளதாகவும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்றும் தெரிவித்தார்.

மேலும் இன்றைய இந்தியாவில் ஜனநாயகம் என்பது இல்லை என விமர்சித்த அவர், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது முற்றிலும் பொய் என்று குறிப்பிட்டார். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் தேர்தல் விளம்பரங்களை செய்வதற்கு கூட தங்களிடம் பணம் இல்லை என்றும், இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும் தடுக்கவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை என பா.ஜ.க. விளக்கமளித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை. அவை செயல்பாட்டில்தான் உள்ளன. அந்தக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம். வருமான வரி விதிகளின்படி நிலுவைத் தொகையை செலுத்தாததால் வருமான வரித் துறையால் இணைக்கப்பட்ட ரூ.125 கோடியைத் தவிர, மற்ற பணத்தை எடுக்கவும் செய்யலாம்.

காங்கிரஸ் கட்சிக்கு பல வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ.1,000 கோடி உள்ளது. தனது சொந்தக் கட்சியின் அரசியலமைப்பை மீறி பல பான் எண்களுடன் வங்கிக் கணக்குகளை காங்கிரஸ் கட்சி திறந்துள்ளது. காங்கிரஸின் நிலையான சொத்து மதிப்பு 500 கோடி ரூபாய் ஆகும்.

விதிகளின்படி ரூ.135 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால், காங்கிரஸ் கட்சியின் 3-4 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை இணைத்துள்ளது. ரெயில் டிக்கெட் வாங்கக் கூட காங்கிரஸ் கட்சியிடம் பணம் இல்லை என ராகுல் காந்தி கூறுகிறார். ஆனால் சிறப்பு விமானத்தில் தினமும் பயணம் செய்கிறார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து, தவறான வாதங்களை முன்வைத்து மக்களின் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.

ஊழல் களத்தில் சமநிலை வேண்டும் என காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் அது சாத்தியமில்லை. ஊழல் களத்தில் ஊழலைச் செய்தவன் ஓடுவான், மற்றொருவன் அவனை பிடிப்பதற்காக துரத்துவான். எங்களுடன் சமநிலை வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியின் ஆடுகளத்தில் விளையாட வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Next Story