வங்கி கணக்கை புதுப்பிப்பதாக கூறி மோசடிபணத்தை இழந்த அதிர்ச்சியில் முதியவர் மாரடைப்பால் சாவு
வங்கி கணக்கை புதுப்பிப்பதாக கூறி முதியவரிடம் மோசடி நடந்துள்ளது. இதில், பணத்தை இழந்த அதிர்ச்சியில் முதியவர் மாரடைப்பால் உயிரிழந்தாா்.
மைசூரு
வங்கி கணக்கு
மைசூரு மாவட்டம் பன்னிமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ரஷீத் அகமத்(வயது 77). இந்த நிலையில் ரஷீத் அகமத்தை மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அதில், அவர் தன்னை வங்கி அதிகாரி என அறிமுகம் செய்துள்ளார்.
பின்னர் உங்களது வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் எனவும், அதற்காக வங்கி கணக்கு எண்ணையும், செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணையும் கூறும்படி கேட்டுள்ளார்.
அதனை நம்பிய ரஷீத் அகமத் மர்மநபர் கேட்ட அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் ரஷீத் அகமத் செல்போனுக்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று கேட்டுள்ளார். அங்கு உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்று வங்கி அதிகாரி கூறியுள்ளார்.
மாரடைப்பால் சாவு
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரஷீத் அகமத் மயங்கி கீழே விழுந்தார். உடனே ரஷீத் அகமத்தை அவரது மகன் மைசூரு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு ரஷீத் அகமத்தை பரிசோதனை செய்த டாக்டா் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ரஷீத் அகமத் பணத்தை இழந்ததால் அதிர்ச்சியில் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து ரஷீத் அகமத்தின் மகன், மைசூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.