பாலியல் பலாத்கார வழக்குகளில் கற்பழிப்பை உறுதிசெய்யும் உடல் பரிசோதனைக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு


பாலியல் பலாத்கார வழக்குகளில் கற்பழிப்பை உறுதிசெய்யும் உடல் பரிசோதனைக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
x

பாலியல் பலாத்கார வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கற்பழிப்பை உறுதிசெய்யும் வகையில் நடத்தப்படுகிற உடல் பரிசோதனைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

கற்பழிப்பு குற்றவாளி விடுதலை

பாலியல் பலாத்கார வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணை உடல் பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதும், அங்கு பெண் டாக்டர்கள், அந்த பெண் கற்பழிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை உறுதி செய்வதற்கு, இருவிரல் பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்குவதும் நடைமுறையாக உள்ளது. இது இரு விரல் பரிசோதனை என அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பெண் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு செசன்ஸ் கோர்ட்டு தண்டனை விதித்தது. ஆனால், இரு விரல் சோதனை முடிவு அடிப்படையில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு மாற்றி, குற்றவாளியை விடுதலை செய்தது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஜார்கண்ட் மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணை முடிவில் குற்றவாளிக்கு செசன்ஸ் கோர்ட்டு வழங்கிய தண்டனை தீர்ப்பை உறுதி செய்தும், ஐகோர்ட்டு வழங்கிய விடுதலை தீர்ப்பை ரத்துசெய்தும் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர்.

இரு விரல் பரிசோதனைக்கு தடை

இந்த தீர்ப்பில் நீதிபதிகள் முக்கிய கருத்துகளை தெரிவித்து, உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளனர். அது வருமாறு:-

* கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்னும் இத்தகைய சோதனை நடைமுறையில் இருப்பது துரதிருஷ்டவசமானது. இந்த சோதனையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரிக்கிறது; இந்த சோதனை பாதிப்புக்குள்ளாகி இருக்கிற பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கிறது.

* இரு விரல் சோதனையில் அறிவியல் அடிப்படையும் இல்லை. இரு விரல் சோதனையானது பாதிக்கப்பட்ட பெண்களை மீண்டும் துயருக்கு ஆளாக்குவதுடன், நிலைகுலையச் செய்கிறது. ஒரு பெண் அளிக்கும் சாட்சியம் வழக்கை நிரூபிக்க எந்த அளவு உதவும் என்பதற்கு அந்த பெண்ணின் பாலியல் வரலாற்றை அளவுகோலாக கொள்ள முடியாது.

* கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இருவிரல் சோதனை நடத்தக்கூடாது. இதை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அனைத்து அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வழங்க வேண்டும்.

'பாடம் நீக்க வேண்டும்'

* இதை மீறி இரு விரல் சோதனையை நடத்தும் எந்தவொரு நபரும் தவறான நடத்தை குற்றவாளியாக கருதப்படுவார்கள்.

* மருத்துவக்கல்வி பாடத்திட்டத்தில் இரு விரல் பரிசோதனை தொடர்பான பாடங்களை நீக்கி விட வேண்டும். இதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story