வருகிற மார்ச் மாதத்திற்குள் கர்நாடகத்தில் தகுதியான அனைவருக்கும் ஆயுஸ்மான் பாரத் அட்டை; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் தகுதியான அனைவருக்கும் வருகிற மார்ச் மாதத்திற்குள் ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
பெங்களூரு:
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மருத்துவ காப்பீட்டு வசதி
கர்நாடகத்தில் பொதுமக்களுக்கு ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் 1 கோடி பேருக்கு இந்த காப்பீட்டு அட்டை வழங்கப்படும். இந்த ஆயுஸ்மான் அட்டை வழங்குவதில் கர்நாடகம் நாட்டிற்கே முன் உதாரணமாக திகழ்கிறது. பொதுமக்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் கர்நாடகம் சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது.
தகுதியான அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2018-ம் ஆண்டு இந்த பணிகளை தொடங்கினோம். இது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கினோம். வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மக்களுக்கு மருத்துவ செலவில் 30 சதவீதத்தை வழங்கினோம். இந்த மருத்துவ வசதி 1,530 நோய்களுக்கு வழங்கப்பட்டது.
விரைவில் வினியோகம்
சிக்பள்ளாப்பூர், ஹாவேரி, பெங்களூரு புறநகரில் தகுதியான மக்களுக்கு இந்த ஆயுஸ்மான் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுகின்றன. சுகாதாரத்துறை பணியாளர்கள், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். 1 கோடி பேருக்கு ஆயுஸ்மான் அட்டை வழங்குவதற்கான பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு இந்த அட்டை விரைவில் வினியோகம் செய்யப்படும்.
கர்நாடகத்தில் வருகிற மார்ச் மாதத்திற்குள் தகுதியான அனைவருக்கும் இந்த ஆயுஸ்மான் பாரத் திட்ட அட்டை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்காக முக்கிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. கர்நாடகத்தில் 5.09 கோடி பேருக்கு இந்த மருத்துவ சுகாதார அட்டை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.