35 பயணிகளை விட்டுச்சென்ற சிங்கப்பூர் விமானம் - விசாரணைக்கு உத்தரவு
ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே 35 பயணிகளை விட்டு விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமிர்தசரஸ்,
அமிர்தசரசில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே 35 பயணிகளை விட்டு விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
அமிர்தசரஸ் விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 7.55 மணிக்கு புறப்படவிருந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம், பல மணிநேரம் முன்னதாக மாலை 3 மணிக்கு புறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தங்கள் புகாரை பதிவு செய்தனர்.
இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது விமானம் புறப்படும் நேரம் மாற்றப்பட்டது குறித்து மின்னஞ்சல் மூலம் பயணிகளுக்கு தகவல் அளித்ததாக தெரிவித்தனர்.
ஒரு குழுவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த முகவர் ஒருவர் விமான நேர மாற்றம் குறித்து அந்த பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை என்றும் மாற்றப்பட்ட நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுடன் விமானம் புறப்பட்டுச் சென்றதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையம் இருவரும் விளக்கம் அளிக்குமாறு டிஜிசிஏ தெரிவித்துள்ளது.