"நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன்"- கெஜ்ரிவாலை வீட்டுக்கு சாப்பிட அழைத்த ஆட்டோ டிரைவர் பேட்டி


நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன்- கெஜ்ரிவாலை வீட்டுக்கு சாப்பிட அழைத்த ஆட்டோ டிரைவர் பேட்டி
x

Image Courtesy: PTI 

பாஜக பேரணி ஒன்றில், கெஜ்ரிவாலை இரவு உணவுக்கு அழைத்த ஆட்டோ டிரைவர் விக்ரம் தந்தானி கலந்து கொண்டார்.

காந்திநகர்,

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இந்த மாத தொடக்கத்தில் குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு சென்ற அவர், ஆட்டோ ஓட்டுனர்கள் கூடிய கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசி முடித்ததும், விக்ரம் தந்தானி என்ற கத்லோடியா பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தனது வீட்டுக்கு சாப்பிட வரும்படி கெஜ்ரிவாலிடம் கோரினார். இதை ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் அன்று இரவு உணவுக்கு அந்த ஆட்டோ டிரைவர் வீட்டிற்குச் சென்றார்.

அப்போது வழியிலேயே குஜராத் போலீஸ் அவரை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டோவில் சென்று கொண்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலைப் பாதுகாப்பு காரணங்களால் அனுமதிக்க முடியாது என்று போலீசார் கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து, சிறிது நேரம் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின்னர், ஆட்டோ ஓட்டுனருக்கு பின்னால் காவல் அதிகாரி ஒருவர் அமர்ந்து கொண்டார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் அவர் ஆட்டோ டிரைவர் வீட்டில் உணவு அருந்தச் சென்றார். அங்கு ஆட்டோ டிரைவருடன் இரவு உணவை அவர் உண்டார்.

இந்த நிலையில் குஜராத்தில் இன்று நடைபெற்ற பாஜக பேரணி ஒன்றில், கெஜ்ரிவாலை இரவு உணவுக்கு அழைத்த ஆட்டோ டிரைவர் விக்ரம் தந்தானி கலந்து கொண்டார். அவரை கண்டு கொண்ட பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய அவர், " நான் கெஜ்ரிவாலை இரவு உணவிற்கு அழைத்தேன், ஏனென்றால் எங்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். எனது வீட்டில் அவருக்கு விருந்து அளிக்க நான் முன்வந்தவுடன், கெஜ்ரிவால் அதை ஏற்றுக்கொண்டார்.

இது இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறும் என்று எனக்குத் தெரியாது. மற்றபடி, நான் ஆம் ஆத்மி கட்சியில் இல்லை. நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன் என்பதால் இங்கு பேரணிக்கு வந்தேன். நான் ஆரம்பம் முதல் பாஜகவில் இருந்து வருகிறேன். கடந்த காலங்களில் எப்போதும் பாஜகவுக்கு எனது வாக்கை அளித்துள்ளேன். இதை நான் எந்த அழுத்தத்திலும் கூறவில்லை" என்றார்.


Next Story