பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் ஏலம்: ஆன்லைன் மூலம் நடக்கிறது
சமீபத்திய நாட்களில் பிரதமர் மோடிக்கு கிடைத்த பல்வேறு பரிசுகள் மற்றும் நினைவுப்பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன.
புதுடெல்லி,
பிரதமர் மோடிக்கு கிடைக்கும் பரிசுகள் மற்றும் நினைவுப்பரிசுகள் அவ்வப்போது ஏலம் விடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சமீபத்திய நாட்களில் அவருக்கு கிடைத்த பல்வேறு பரிசுகள் மற்றும் நினைவுப்பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன.
இந்த பொருட்கள் அனைத்தும் தேசிய அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சி மற்றும் ஏலம் நேற்று தொடங்கி இருக்கிறது. இந்த பொருட்களின் புகைப்படங்களை பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர், 'தேசிய அருங்காட்சியகத்தில் இன்று (நேற்று) முதல் தொடங்கியுள்ள கண்காட்சியில், கடந்த காலங்களில் எனக்கு வழங்கப்பட்ட பலவிதமான பரிசுகள் மற்றும் நினைவுப்பரிசுகள் இடம்பெறும். இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்வுகளின் போது எனக்கு வழங்கப்பட்ட இந்த பொருட்கள், நாட்டின் வளமான கலாசாரம், பாரம்பரியம் மற்றும் கலை பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாகும்' என குறிப்பிட்டு இருந்தார். எப்போதும் போல இந்த பொருட்களின் ஏலம் மூலம் கிடைக்கும் தொகை கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.