வெளிநாட்டு மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி; ஐதராபாத் பல்கலைக்கழக பேராசிரியர் கைது
வெளிநாட்டு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தில் மாணவர்களின் போராட்டத்திற்கு பின் ஐதராபாத் பல்கலைக்கழக பேராசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஐதராபாத்,
ஐதராபாத் பல்கலை கழகத்தில் பல்வேறு துறை சார்ந்த படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இதில், இந்தி துறையில் பேராசிரியராக இருப்பவர் பேராசிரியர் ரவி ரஞ்சன். பல்கலை கழகத்தின் வளாகம் அருகே தங்கியுள்ளார்.
இந்த நிலையில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் முதுநிலை படிப்பில் சேர்ந்து உள்ளார்.. அவரை இந்தி கற்பதற்காக தனது இல்லத்திற்கு வரும்படி பேராசிரியர் அழைத்துள்ளார்.
அந்த மாணவியும் படிக்கும் ஆர்வத்தில் சென்றுள்ளார். இதன்பின் மதுபானம் கொடுத்து மாணவியை பேராசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால், அந்த மாணவி மனஉளைச்சலுக்கு ஆளானார்.
இதுபற்றி சக மாணவிகளிடம் கூறி உள்ளார். அவருக்கு ஆங்கிலத்தில் சரியாக பேச வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆன்லைன் வழியே செயலி ஒன்றை பயன்படுத்தி சம்பவம் பற்றி தெரிவித்து உள்ளார்.
உடனடியாக அவரை சக மாணவ மாணவிகள் பல்கலை கழகத்தில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்து சென்று, பரிசோதனை செய்துள்ளனர். இதன்பின்பு, கச்சிபவுலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுபற்றி மத்திய பல்கலை கழகத்தின் வெளிநாட்டு பரிமாற்ற திட்ட இயக்குனரும் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, மாணவியிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. இதற்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவர் உதவியுள்ளார். பாலியல் பலாத்காரம் செய்தியை தொடர்ந்து, வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்பு, பேராசிரியர் ரவி ரஞ்சன் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.