தடையை மீறி தட்சிண கன்னடா மாவட்டத்துக்குள் நுழைய முயற்சி: ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கைது


தடையை மீறி தட்சிண கன்னடா மாவட்டத்துக்குள் நுழைய முயற்சி: ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கைது
x

போலீசாரின் தடையை மீறி தட்சிண கன்னடா மாவட்டத்துக்குள் நுழைய முயன்ற ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கைது செய்யப்பட்டார்.

மங்களூரு;

144 தடை உத்தரவு

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டார். பா.ஜனதா பிரமுகரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இதனால் தட்சிண கன்னடாவில் வன்முறை வெடித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் மங்களூரு அருகே சூரத்கல் பகுதியில் முகமது பாசில் என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

அடுத்தடுத்து கொலை நடந்ததால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பதற்றமும், அசாதாரண சூழ்நிலையும் நிலவுகிறது. இதனால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவும், இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பிரமோத் முத்தாலிக்

இந்த நிலையில் ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், தட்சிண கன்னடா மாவட்டத்திற்குள் நுழைவேன் என்றும், படுகொலை செய்யப்பட்ட பிரவீனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவேன் என்றும் அறிவித்து இருந்தார். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தட்சிண கன்னடா மாவட்டத்துக்குள் பிரமோத் முத்தாலிக் நுழைய மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா தடை விதித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் பிரமோத் முத்தாலிக், ஸ்ரீராமசேனை தொண்டர்களுடன் தட்சிண கன்னடா மாவட்டத்துக்குள் நுழைய உடுப்பி மாவட்டம் ஹெஜமாவடி வழியாக வந்தார். அப்போது அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் அங்கேயே தொண்டர்களுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

கைது

மேலும் அவர் தடையை மீறி தட்சிண கன்னடா மாவட்டத்துக்குள் நுழைய முயன்றார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்த்து ஸ்ரீராமசேனை தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை போலீசார் விடுவித்து அங்கிருந்து திருப்பி அனுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story