ஐபோன் வாங்கியது தொடர்பான பிரச்சினையில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து
ஐபோன் வாங்கியது தொடர்பான பிரச்சினையில் கல்லூரி மாணவரை 2 வாலிபர்கள் கத்தியால் குத்தினர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகல்கோட்டை:
ஐபோன் வாங்கியது தொடர்பான பிரச்சினையில் கல்லூரி மாணவரை 2 வாலிபர்கள் கத்தியால் குத்தினர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐபோன் வாங்கினார்
பாகல்கோட்டை டவுன் நவநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா ஹெலவா(வயது 21). இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். அவர் ஐபோன் வாங்குவதற்கு முடிவு செய்தார். அதன்படி அவர் அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் மற்றும் பிரதீப் ஆகிய 2 பேரிடம் இருந்து பழைய ஐபோன் ஒன்றை வாங்கினார். அதற்காக அவர் ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார்.
இந்த நிலையில் அந்த செல்போன் சேதமடைந்தது என்றும், அது முறையாக வேலை செய்யாது எனவும் தருண் என்பவர் கிருஷ்ணா ஹெலவாவிடம் கூறினார். இதையடுத்து அவர் அந்த செல்போனை பிரசாந்த் மற்றும் பிரதீப்பிடம் திருப்பி கொடுத்துள்ளார். மேலும் தனக்கு ரூ.25 ஆயிரத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் உண்டானது.
முன்விரோதம்
இதையடுத்து ஆத்திரமடைந்த பிரசாந்த் மற்றும் பிரதீப் ஆகியோர் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணா ஹெலவாவை குத்தினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நவநகர் போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் மற்றும் செல்போன் தொடர்பான பிரச்சினையில் மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் பிரசாந்த் மற்றும் பிரதீப் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பிரசாந்த் மற்றும் பிரதீப் ஆகியோர் கூட்டாக வாளுடன் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.