ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயற்சி: தமிழக வியாபாரிக்கு 3½ ஆண்டு சிறை தண்டனை
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயற்சித்த வழக்கில் வியாபாரிக்கு 3½ ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
சென்னையை சேர்ந்தவர் நமச்சிவாயா(வயது 35). இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் பெங்களூரு யஷ்வந்தபுரம் பகுதியில் வசித்து வந்தார். பழக்கடை ஒன்றை அவர் நடத்தி வந்தார். இந்த நிலையில் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திருட்டில் இறங்குவதற்கு முடிவு செய்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்தார். அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை அவர் உடைக்க முயன்றார்.
அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட 2 போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். எனினும் அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுதொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவும் செய்தனர். இந்த வழக்கு பெங்களூரு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர் அவர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்றதுடன், போலீசாரையும் தாக்கியது உறுதியானதால், பழ வியாபாரி நமச்சிவாயாவுக்கு 3½ ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.