ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளை
பங்காருபேட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.15 லட்சத்தை மர்மநபர்கள் கியாஸ் கட்டரை பயன்படுத்தி கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.
கோலார் தங்கவயல்:
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை டவுனில் கோலார் சாலையில் ஹஞ்சலா கேட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் காவலாளி கிடையாது என தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அந்தப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக அவர்கள் பங்காருபேட்டை போலீசாருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், வங்கி அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேசும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.
அப்போது கியாஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் யாரோ மர்மநபர்கள், நள்ளிரவு ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து கியாஸ் கட்டரை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அந்த ஏ.டி.எம். மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை என தெரிகிறது. இதனை நன்கு அறிந்த மர்மநபர்களே, இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்களின் ரேகைகளையும் போலீசார் பதிவு செய்துகொண்டனர்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள், பங்காருபேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பங்காருபேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.