டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம்
காற்றின் தரம் 50 க்கு கீழ் இருந்தால் நல்லது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் இப்படித்தான் மோசமடையும். இந்த நிலையில் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் மோசமான புகை மூட்டத்தால் மக்கள் சுவாசிக்க முடியாத நிலையில் இருந்தனர். டெல்லியில் காற்றின் தர குறியீடு 300 புள்ளிகளை தாண்டி இருந்தது.
இது மிகவும் மோசமான பாதிப்பு ஆகும். இதனால் கடந்த 9ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்துள்ளதால் இன்று முதல் அனைத்து அரசு , அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவலின்படி, தேசிய தலைநகரில் காற்றின் தரக் குறியீடு (310) 'மிகவும் மோசமான' பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரம் 50 க்கு கீழ் இருந்தால் நல்லது. 51 முதல் 100 வரை இருந்தால் திருப்தி, 101 முதல் 200 க்கு இடையே இருந்தால் அது மிதமானது. 201 முதல் 300 இடையே இருந்தால் அது மோசமானது, 301 மற்றும் 400 இடையே இருந்தால் மிக மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.