ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணைக்கு தடைவிதிக்க மறுப்பு


ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணைக்கு தடைவிதிக்க மறுப்பு
x

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

புதுடெல்லி,

கடந்த 2001-2006-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 77 லட்சம் அளவுக்கு சொத்துகள் குவித்ததாக, 2006-ல் தி.மு.க. ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை கோர்ட்டு கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரிக்க தடை கோரி முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் விசாரணையை பாதிக்கக்கூடாது என்றும் தெளிவுபடுத்தினர்.


Next Story