துருவநாராயண் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்
கர்நாடக சட்டசபையில் துருவநாராயண் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெங்களூரு:-
75 சதவீத வெற்றி
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் சபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். அதைத்தொடா்ந்து சட்டசபையில் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் யு.டி.காதர் தாக்கல் செய்தார். காங்கிரஸ் செயல் தலைவராக இருந்த துருவநாராயண் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். இதில் டி.கே.சிவக்குமார் பேசும்போது கண்ணீர் சிந்தி தனது அஞ்சலியை செலுத்தினார். அவர் தொடர்ந்து பேசியதாவது:-
துருவநாராயண் எனக்கு சகோதரரை போன்றவர். அவரது மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் செயல் தலைவராக அவர் பணியாற்றினார். அவருக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் 75 சதவீத வெற்றி கிடைத்துள்ளது. எனக்கு பிறகு காங்கிரஸ் தலைவராக துருவநாராயணை நியமிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.
சாதனை படைத்தார்
ஆனால் எதிர்பாராத விதமாக அவா் மரணம் அடைந்துவிட்டார். அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்று மந்திரியாக பணியாற்றி இருப்பார். கட்சி அவருக்கு கொடுத்த பொறுப்புகளை மிக திறமையாக நிர்வகித்தார். சாம்ராஜ்நகர் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 பேர் மட்டுமே இறந்ததாக மந்திரி சொன்னார். ஆனால் அங்கு 36 பேர் இறந்தனர் என்பதை உறுதி செய்தவர் துருவநாராயண்.
தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். அவரது மறைவு எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.
இந்த கூட்டத்தில் இனாம்தார், வெங்கடேஷ்சாமி, புஜங்கஷெட்டி உள்ளிட்டோரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரங்கல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.