அசாமில் மசூதிகளுக்கு வரும் வெளிமாநில மத போதகர்கள் கட்டாயம் அரசின் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: அரசு புதிய உத்தரவு!
அசாமில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன என கிடைத்த தகவலை தொடர்ந்து புதிய நடைமுறை.
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தில், மசூதிகள் மற்றும் மதரஸாக்களில் உள்ள மத போதகர்கள், இமாம்கள் ஆகியோர் வெளி மாநிலத்தில் இருந்து அசாமுக்கு வந்தால், இனிமேல் அவர்கள் தங்கள் விவரங்களை அரசாங்க இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அசாமில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன என கிடைத்த தகவலை தொடர்ந்து, வங்காளதேச பயங்கரவாதக் குழுவான அன்சாருல் இஸ்லாத்துடன் தொடர்புள்ள 40க்கும் மேற்பட்டோரை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், அல்-கொய்தாவின் இந்திய துணை கண்டம் பயங்கரவாத அமைப்புடன் மற்றும் அன்சாருல்லா வங்காள குழு (ஏ.பி.டி.) ஆகியவற்றுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய 2 பயங்கரவாதிகள், கோல்பாரா மாவட்டத்தில் வைத்து அசாம் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்களை தொடர்ந்து, அசாமில் கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இது குறித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வ சர்மா கூறியிருப்பதாவது:-
இமாம்களுக்காக வலைதளம் ஒன்றையும் நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதன்படி, வெளி மாநிலத்தில் இருந்து அசாமுக்கு வரும் இமாம்கள் தங்களது பெயர்களை அதற்கான வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், மசூதியில் இமாமாக பணியாற்றியவர். பல கிராமங்களில் ஜிகாதி வலையமைப்பை விரிவுபடுத்தியிருந்தார். ஜிகாதி வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக 6 வங்கதேச பிரஜைகள் அசாமில் நுழைந்துள்ளனர். அதில் ஒருவரை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர் மற்றும் ஐந்து பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். அசாம் காவல்துறை தனது நடவடிக்கையை தொடரும்.
இமாம் யாராவது அசாம் கிராமங்களுக்கு வந்தால், சரிபார்ப்புக்காக மக்கள் உள்ளூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.காவல்துறையால் சரிபார்க்கப்பட்ட பிறகு, மக்கள் அவரை இமாமாக நியமிக்கலாம். இதற்கு அசாமின் முஸ்லிம் சமூகம் எங்களுக்கு ஆதரவாக உள்ளது.
இந்த விதிகள் அசாமில் வசிப்பவர்களுக்கு பொருந்தாது. அசாமில் வசிப்பவர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தங்கள் விவரங்களை இணையதளம் வயிலாக பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.