மோசடியில் ஈட்டுபட்ட வருங்கால கணவரை கைது செய்த பெண் போலீஸ் அதிகாரியின் பரிதாப நிலை


மோசடியில் ஈட்டுபட்ட வருங்கால கணவரை கைது செய்த பெண் போலீஸ் அதிகாரியின் பரிதாப நிலை
x

கடந்த மாதம் மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட போகாட் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கவுகாத்தி

அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜுன்மோனி ரபா, இவர் உதவி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் ஜுன்மோனி ரபாவிற்கு திருமணத்திற்காக வரன் தேடி வந்துள்ளனர்.

திருமணம் வரன் பார்க்கும் இணையதளத்தில் பதிவு செய்து இருந்தனர். ராணா போகட் என்பவர் இணையதளம் வழியாக ஜுன்மோனிக்கு அறிமுகமாகியுள்ளார்.

தான் அரசு அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய ஜுன்மோனியும், ராணா போகட்டுடன் பேசி பழகிவந்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

வரும் நவம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த உடன் வருங்கால கணவருடன் உதவி இன்ஸ்பெக்டர் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளார். இதற்கிடையில் ஜுன்மோனிக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபர் திடீரென்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நீங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நபர் சரியானவர் இல்லை நீங்கள் விசாரித்துப் பாருங்கள் அவருடைய உண்மை முகம் தெரியும் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து ஜுன்மோனி ராணாவிடம் விசாரித்து உள்ளார். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அவரின் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது.இதையடுத்து அவருக்கு தெரியாமலே ராணா குறித்து ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனத்தின் உயர் அதிகாரி எனக் கூறி கொண்டு, பலரிடம் வேலை வாங்கி தருவதாக கோடிக் கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ராணா மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இதற்கான முழு ஆதாரங்களைத் திரட்டி ஜுன்மோனி தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர் என்றும் பாராமல் ராணா போகட்டை அதிரடியாகக் கைது செய்தார்.

இது குறித்து செய்திகள் வெளியானபோது, ராபாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. ஆனால், சில நாள்களிலேயே அந்த நிலை தலைகீழாக மாறி, அந்த மோசடி வழக்கில் ராபாவுக்கும் தொடர்பிருப்பதாகவும், மோசடி மூலம் ராபாவின் வங்கிக் கணக்குகளில் ரூ.20 லட்சம் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் அதிகாரி என்று போகட்டை தங்களுக்கு ராபா தான் அறிமுகம் செய்து வைத்ததாகவும், அவரது உறுதிமொழியின் பேரிலேயே போகாட்டுக்கு பணத்தை பரிமாற்றம் செய்ததாகவும் இரண்டு ஒப்பந்ததாரர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான ஆடியோ பதிவுகளும் காவல்துறைக்குக் கிடைத்திருப்பதாகவும், அதன் உறுதித் தன்மை ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மாதம் மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட போகாட் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Next Story