'எமர்ஜென்சி' காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 301 பேருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் - அசாம் அரசு அறிவிப்பு


எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 301 பேருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் - அசாம் அரசு அறிவிப்பு
x

'எமர்ஜென்சி' காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 301 பேருக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க உள்ளதாக அசாம் அரசு அறிவித்துள்ளது.

கவுகாத்தி,

'எமர்ஜென்சி' காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 301 பேருக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க உள்ளதாக அசாம் அரசு அறிவித்துள்ளது.

முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி அசோக் சிங்கால் கூறியதாவது:-

எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை ஜனநாயக போராளியாக மாநில அரசு கருதுகிறது. ஜனநாயகத்திற்கான அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 301 பேருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க அசாம் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். அந்த நபர் இல்லாவிட்டால், அவரது மனைவிக்கு அந்தத் தொகை வழங்கப்படும். அவர்கள் இருவரும் இறந்துவிட்டால், அவர்களின் திருமணமாகாத மகளுக்கு அந்தத் தொகை கிடைக்கும்.

இந்தியாவில் பல மாநிலங்கள் எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகின்றன. ஆனால் அசாம் வழங்கும் தொகை அதிகமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை 21 மாத காலத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் 804.1 கிமீ எல்லையை உதல்குரி, சோனித்பூர், பிஸ்வநாத், லக்கிம்பூர், தேமாஜி, டின்சுகியா, திப்ருகார் மற்றும் சாரெய்டியோ மாவட்டங்களில் பகிர்ந்து கொள்கின்றன. இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் 1,200 இடங்களில் தகராறுகள் உள்ளன.

இது குறித்து பேசிய சுற்றுலாத்துறை மந்திரி ஜெயந்த மல்லா பருவா கூறும்போது, "அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் தங்களது நீண்டகால எல்லைப் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் வியாழக்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.

பல மாதங்களாக எல்லைத் தகராறுகள் குறித்து விவாதித்து வந்த பல கூட்டு பிராந்தியக் குழுக்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு, தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்தன. அதற்கு அசாம் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்று கூறினார்.

மேலும் அவர், "எட்டு மெகா திட்டங்களுக்கு ரூ.8,201.29 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்களின் மூலம் 6,100 இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். அதே சமயம் மறைமுக வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்" என்று கூறினார்.


Next Story