அசாமில் என்கவுண்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
அசாமில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் இன்று போலீசார் நடத்திய கடுமையான என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் பல போலீசார் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலீசார் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், கவுகாத்தியில் உள்ள அசாம் போலீஸ் தலைமையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எங்கள் தரப்பில் போலீசார் சிலருக்கு காயம் ஏற்பட்டது. கச்சார் மாவட்ட போலீசாரிடம் இருந்து எங்களுக்கு இன்னும் அறிக்கை வரவில்லை. கிழக்கு தோலை கங்காநகரில் இருந்து 3 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயணம் செய்த ஆட்டோவில் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களையும் கைப்பற்றினர். மேலும், மற்ற பயங்கரவாதிகளை தேடி ஒரு போலீஸ் குழு இன்று காலை அந்த மூன்று பேரையும் பாபன் ஹில்ஸ் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது என்கவுண்ட்டர் நடந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேநேரத்தில் 3 போலீசாருக்கும் காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த அனைவரும் சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.