'விபத்துக்கு பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரியைப் போல் ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும்' - சரத் பவார்
விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகியதாக சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மும்பை,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலகவேண்டும் என்றார் தேசியவாத கட்சி தலைவர் சரத் பவார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "லால் பகதூர் சாஸ்திரி ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ஒரு விபத்து நடந்தது. அதன்பிறகு, பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்யும் முடிவை ஜவகர்லால் நேரு எதிர்த்தார். ஆனால் அதற்கு எனது தார்மீக பொறுப்பு என்று சாஸ்திரி கூறிவிட்டு ராஜினாமா செய்துள்ளார். தற்போது இதேபோன்ற சம்பவத்தை நாடு எதிர்கொள்கிறது. அரசியல்வாதிகள் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.