போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்ததால் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம்
தலப்பாடி சுங்கச்சாவடியில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தனியார் பஸ்சை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்ததால் தனியார் பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மங்களூரு;
சுங்கச்சாவடி
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து கேரளாவுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று காலையில் ஒரு தனியார் பஸ் மங்களூருவில் இருந்து புறப்பட்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் மங்களூரு - கேரளா நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பஸ்சை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேலும் அந்த பஸ்சில் சோதனை செய்து, ஆவணங்களை சரிபார்த்தனர். பின்னர் அந்த பஸ்சுக்கு அபராதம் விதித்து, செல்போனில் படம் பிடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் கண்டக்டரும், டிரைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக அந்த வழியாக வந்த அனைத்து தனியார் பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
பரபரப்பு
இதனால் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தனியார் பஸ் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே தலப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். மேலும் பிரச்சினைக்கு காரணமான தனியார் பஸ் டிரைவர் ராஜூவை உல்லால் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.