'மாநிலங்களவையில் இடையூறுகளை மட்டுமே பார்க்கிறேன்' - ஜெக்தீப் தன்கர் ஆதங்கம்
அவைத்தலைவராக, மாநிலங்களவையில் இடையூறுகளை மட்டுமே பார்ப்பதாகவும், விவாதங்கள் நடைபெறவில்லை என்றும் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் ஆதங்கம் வெளியிட்டு உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி ஐ.ஐ.எம். நிறுவனத்தில் நடந்த 25-வது பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் விழாவில் உரையாற்றும்போது அவர், நாடாளுமன்ற அமளி மற்றும் முடக்கத்தை சுட்டிக்காட்டி பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விவாதம் இல்லை
இந்தியாவின் நீதி அமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான நிர்வாக அமைப்பும் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் நாடாளுமன்றம் என வரும்போது, உங்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் மிகவும் குறைவு. மாநிலங்களவை தலைவராக, அவையில் நான் விவாதத்தையோ, பேச்சுவார்த்தையோ பார்க்கவில்லை. வெறும் முடக்கம் மற்றும் இடையூறு போன்றவற்றையே பார்க்கிறேன்.
அரசியல் கட்சியினருக்கு அரசியல் செய்வதற்கான உரிமை உண்டு. ஆனால் தேச நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்த விஷயங்களுக்கு கட்சி வரையறை கடந்து அரசியல்வாதிகள் ஒத்துழைக்க வேண்டும்.
குரல் கொடுக்க வேண்டும்
சுப்ரீம் கோர்ட்டும், நிர்வாகமும் சிறப்பாக செயல்படும்போது, நாடாளுமன்றம் மட்டும் ஏன் தவறுகிறது?
எனவே செயல்படுபவர்கள், தங்கள் பதவிக்கு நியாயம் சேர்ப்பவர்கள், அரசியலமைப்பு எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பணி செய்பவர்களை உள்ளடக்கிய பாராட்டப்படும் ஒரு அமைப்பை நீங்கள் உருவாக்க வேண்டும். தங்கள் ஆணையை நிறைவேற்ற தவறுபவர்களுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.
ஊழலுக்கு இடமில்லை
நாட்டின் மின் வழித்தடங்கள் ஒரு காலத்தில் அதிகார தரகர்கள் மற்றும் டீலர்களால் பாதிக்கப்பட்டன. அந்த மின் வழித்தடங்கள் தற்போது சுத்திகரிக்கப்பட்டுள்ளன. அதிகார தரகர்களின் அமைப்பு ஒழிந்து விட்டது. அது ஒருபோதும் புத்துயிர் பெற முடியாது.
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை நிர்வாகத்தின் ஹால்மார்க் ஆகும். இவை அனைத்துக்குமான ஒரே காரணம், ஊழலுக்கு இடமில்லை என்பதே என்று ஜெக்தீப் தன்கர் கூறினார்.