இணையத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதே அரசின் நோக்கம் - ஐடி விதிகள் திருத்தம் குறித்து மத்திய மந்திரி விளக்கம்
திருத்தப்பட்ட விதிகளின்படி, இணையத்தில் சட்டவிரோதமான உள்ளடக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
புதுடெல்லி,
சமூக ஊடக நிறுவனங்களுக்குப் பொருந்தும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகளில் திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பாணையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்தியாவில் சமூக ஊடகங்கள் மீது அதிகரித்து வரும் பயனர்களின் புகாரை ஆய்வுக்கு உட்படுத்தி, தீர்வு காண்பதற்காகவும் மத்திய அரசு "குறைகள் மேல்முறையீட்டுக் குழுவை" அமைக்கவிருக்கிறது.இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தகவல் தொழில்நுட்பம் திருத்த விதிகள், 2022 அறிமுகப்படுத்தப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட 'குறைகள் மேல்முறையீட்டுக் குழுக்களை' அமைக்கும் " என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், இந்திய சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 28 முதல் நடைமுறைக்கு வந்துள்ள திருத்தப்பட்ட விதிகளின் கீழ், சமூக ஊடக தளங்களின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் முடிவுகள் குறித்த பயனர்களின் புகார்களைக் கேட்க அரசு குழு ஒன்று அமைக்கப்படும்.
சமூக ஊடக நிறுவனங்கள் 24 மணி நேரத்திற்குள் பயனர்களிடமிருந்து புகார்களை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், பயனாளர்களின் புகார்கள் மீது சமூக ஊடகங்கள் எடுத்த நடவடிக்கை திருப்தி தராவிடில் அவர்கள் மேல்முறையீடு செய்யும் வகையில் மேல்முறையீட்டுக் குழுக்களை அமைக்கும் விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மேல்முறையீட்டுக் குழுக்கள் மூன்று மாதங்களில் அமைக்கப்படும் என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை-மந்திரி ராஜீவ் சந்திரசேகர் இன்று கூறுகையில்;-
ஐடி சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. திருத்தப்பட்ட விதிகளின்படி, இணையத்தில் சட்டவிரோதமான உள்ளடக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இணையதளத்தை பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றுவதே அரசின் நோக்கம்.வேண்டுமென்றே தவறான தகவல்களை பகிர்ந்திட, இணையம் ஒரு பங்காக இருக்க முடியாது.
அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணையத்தின் நோக்கத்துடன், அனைத்து பெரிய மற்றும் சிறிய வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவனங்களுடனும் ஒரு கூட்டாண்மை மாதிரியில் பணியாற்ற அரசு விரும்புகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.