பாலியல் வழக்கில் கைதாகி உள்ள முருக மடாதிபதிக்கு 21-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு
பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முருக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவுக்கு வருகிற 21-ந்தேதி வரை காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சித்ரதுர்கா;
மடாதிபதி போக்சோவில் கைது
சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இவர் மடத்தில் உள்ள பள்ளியில் பயிலும் 2 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இவருடன் சேர்ந்து மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஜாமீன் கேட்டு
இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு கோட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால் அவரது மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருக மடத்தில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, ஜனாதிபதி, பிரதமர், முதல்-மந்திரி உள்பட முக்கிய தலைவர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் திருட்டு போனது.
காவல் நீட்டிப்பு
அந்த புகைப்படங்களை திருடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த நிலையில் மடாதிபதியின் நீதிமன்ற காவல் ேநற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று அவரை போலீசார் சித்ரதுர்கா இரண்டாம் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது போலீசார் தரப்பில் வாதிட்ட வக்கீல், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவின் காவலை நீட்டிக்கும் படி கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி பி.கே.கோமளா மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணருவின் நீதிமன்ற காவலை வருகிற 21-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மடாதிபதி சித்ரதுர்கா சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.