உப்பள்ளி அருகே ரூ.80 லட்சம் கட்டுமான பொருட்களை திருடிய 2 பேர் சிக்கினர்
உப்பள்ளி அருகே ரூ.80 லட்சம் மதிப்பிலான கட்டுமான பொருட்களை திருடிய 2 பேர் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
உப்பள்ளி:
உப்பள்ளி அருகே ரூ.80 லட்சம் மதிப்பிலான கட்டுமான பொருட்களை திருடிய 2 பேர் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
கட்டுமான பொருட்கள் திருட்டு
தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா பண்டிவாடா கிராமத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குடோன் கட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த குடோன் கிராம பஞ்சாயத்து சார்பில் கட்டப்படுகிறது. இதற்காக வாங்கப்பட்டு இருந்த கட்டுமான பொருட்கள் கிராம பஞ்சாயத்து வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த கட்டுமான பொருட்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
ஒரு சரக்கு வேனை கொண்டு வந்து அதில் ஏற்றி அந்த பொருட்களை அவர்கள் திருடிச் சென்றிருந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. திருட்டுப்போன கட்டுமான பொருட்களின் மதிப்பு ரூ.80 இருக்கும் என்று கூறப்படுகிறது.
கைது
இதுபற்றி உப்பள்ளி புறநகர் போலீசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் அந்த பொருட்களை திருடியது அன்னிகேரி பகுதியைச் சேர்ந்த மாருதி(வயது 40), குசுக்கல் கிராமத்தைச் சேர்ந்த பீர்சாப்(45) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாருதி உள்ளிட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான கட்டுமான பொருட்கள், ரூ.8 லட்சம் மதிப்பிலான சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் திருட்டு சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.