"பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும்; இல்லாவிட்டால்..." - மத்திய அரசுக்கு விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை


பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும்; இல்லாவிட்டால்... - மத்திய அரசுக்கு விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை
x

கோப்புப்படம்

பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும், இல்லாவிட்டால் பெரிய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான, பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில், சரண் சிங்குடன், பயிற்சியாளர்கள் சிலர் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உதவி செயலாளர் வினோத் தோமர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனிடையே புதிய நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணி நடத்திய போது, டெல்லி போலீசார் அவர்களை கைது செய்து இழுத்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு உலக மல்யுத்த சம்மேளனம் கண்டனம் வெளியிட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப் போவதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்தனர். பின்னர், விவசாய சங்க தலைவர் திகைத் தலையிட்டு, 5 நாள் காத்திருக்கும்படி அவர்களிடம் கேட்டு கொண்டார்.

இந்த நிலையில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும், இல்லாவிட்டால் பெரிய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று விவசாய சங்க தலைவர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் கூறியதாவது:-

மல்யுத்த வீரர்களின் குறைகளை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும். பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மல்யுத்த வீரர்களுடன் ஜூன் 9-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தருக்குச் சென்று நாடு முழுவதும் பஞ்சாயத்து நடத்துவோம். மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும். பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்பட வேண்டும்" என்று கூறினார்.


Next Story