மத்தியப் பிரதேசம்: துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை
மத்திய பிரதேசத்தில், பீகாரைச் சேர்ந்த கும்பல் துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியிலிருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கத்தைக் கொள்ளையடித்துள்ளது.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் தங்கநகைக் கடன் வழங்கும் வங்கியில் பீகாரைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து கட்னி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.கே ஜெயின் கூறும்போது, மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்து ஆயுதம் ஏந்திய 6 கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியில் இருந்த மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
பார்கவான் பகுதியில் அமைந்துள்ள இந்த வங்கியில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. 4 முதல் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தையும் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பணத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.
ரூ.8 கோடி மதிப்புள்ள 16 கிலோ தங்கத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்துக் கேட்டதற்கு, கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தின் எடை குறித்து வங்கி அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறினார்.
கொள்ளையர்கள், 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகம் படிக்காதவர்கள் என்றும் அவர் கூறினார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.