அரியானா: தாதா மனைவி, மிரட்டி பணம் பறிப்பு... சுட்டு கொல்லப்பட்ட மாடல் அழகியின் பகீர் பின்னணி
திவ்யா பணம் கேட்டு அச்சுறுத்தி வந்ததுடன், சிங்குடன் இருந்த ஆபாச படங்களை காட்டி அவரை மிரட்டி வந்துள்ளார் என்றும் தெரிய வருகிறது.
குருகிராம்,
அரியானாவின் குருகிராம் நகரில் பெரிய தாதாவாக அறியப்பட்டவர் சந்தீப் கடோலி. கடந்த 2016-ம் ஆண்டு இவர் சுட்டு கொல்லப்பட்டார். இவருடைய காதலியான திவ்யா பகுஜா உதவியுடன் சந்தீப் கடோலி வரவழைக்கப்பட்டு, போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார் என மும்பை போலீசார் அப்போது தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது திவ்யாவுக்கு வயது 20.
இந்த வழக்குடன் தொடர்புடைய மாடல் அழகியான திவ்யா பகுஜாவுக்கு (வயது 27) 7 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த ஆண்டு ஜூனில் ஜாமீன் கிடைத்தது. இதனையடுத்து வெளியே வந்த அவர், குருகிராம் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சுட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதன்பின் முக்கிய குற்றவாளியான அபிஜீத் சிங் (வயது 56), அவருடைய கூட்டாளிகளான ஹேம்ராஜ் (வயது 28) மற்றும் ஓம்பிரகாஷ் (வயது 23) ஆகிய 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஓட்டல் உரிமையாளரான சிங்கிடம் விசாரித்ததில், திவ்யா பணம் கேட்டு அச்சுறுத்தி வந்ததுடன், சிங்குடன் இருந்த ஆபாச படங்களை காட்டி அவரை மிரட்டி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. எனினும், திவ்யாவின் குடும்பத்தினர் இந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தனர்.
இதனால், போலீசார் சி.சி.டி.வி. வீடியோவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், ஓட்டல் உரிமையாளரான சிங் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்து திவ்யாவின் உடலை வெள்ளை நிற போர்வை ஒன்றால் சுற்றி ஓட்டலில் இருந்து எடுத்து சென்றுள்ளனர்.
அவர்கள் உடலை பி.எம்.டபிள்யூ. காரில் ஏற்றியுள்ளனர். இதன்பின்னர், வேறு 3 பேரை சிங் அழைக்கிறார். அவர்கள் திவ்யாவின் உடலுடன் காரை ஓட்டி சென்றனர்.
இந்த காட்சிகளை கொண்டு முதன்மை குற்றவாளியான சிங்கை போலீசார் முதலில் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக ஹேம்ராஜ் மற்றும் ஓம்பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்குடன் தொடர்புடைய மற்ற நபர்களையும் மற்றும் திவ்யாவின் உடலையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இந்த வழக்கில் திவ்யா பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் கடோலியின் காதலியாக இருந்தபோது, அவரை கொண்டே போலி என்கவுண்ட்டரை போலீசார் நடத்தி உள்ளனர்.
இதற்காக திவ்யா போலீசுக்கு தகவல் அளிப்பவராக செயல்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கில், திவ்யா அவருடைய தாயார் மற்றும் 5 போலீசார் மீது வழக்கு பதிவாகி உள்ளது. ஜாமீனில் வெளிவருவதற்கு முன் 7 ஆண்டுகள் வரை திவ்யா சிறையில் இருந்திருக்கிறார்.
இந்த சம்பவத்தில் கடோலியின் குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடோலியின் சகோதரியான சுதேஷ் கடாரியா, சகோதரர் பிரம்ம பிரகாஷ் ஆகியோர் அபிஜீத்துடன் இணைந்து திவ்யாவை படுகொலை செய்ய திட்டமிட்டு, அதனை செயல்படுத்தி உள்ளனர் என திவ்யா குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதன்பேரிலேயே அபஜீத்திடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். எனினும், ஜாமீனில் வெளியே வந்த பின்னர், திவ்யா ஓட்டல் உரிமையாளரான சிங்குடன் பழகி அவரை மிரட்டி, பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வந்துள்ளார். சிங்குடனான ஆபாச புகைப்படங்களை காட்டி பெரிய தொகையை பெற்று கொண்ட பின்னரும், அதனை அழிக்க திவ்யா மறுத்திருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாகவே, திவ்யாவை ஆத்திரத்தில் அபிஜீத் சிங் தன்னுடைய ஓட்டலில் வைத்து சுட்டு கொன்றுள்ளார். அதற்கு முன், திவ்யாவுடன் சேர்ந்து ஒன்றாக, சிங் ஓட்டலுக்கு நடந்து வரும் காட்சிகளும், ஓட்டல் வரவேற்பறையில் இருவரும் ஒன்றாக நிற்கும் காட்சிகளும் போலீசாருக்கு கிடைத்துள்ளன.
இதன்பின்னர் 19 மணிநேர இடைவேளைக்கு பின், திவ்யாவின் உயிரற்ற உடலை இழுத்து செல்லும் காட்சிகளும் வழக்கிற்கு வலு சேர்த்துள்ளன. தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. திவ்யாவின் படுகொலையால், கடோலியின் போலி என்கவுண்ட்டர் வழக்கில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.