அரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழப்பு: 7 பேர் கைது


அரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழப்பு: 7 பேர் கைது
x
தினத்தந்தி 11 Nov 2023 12:58 PM IST (Updated: 11 Nov 2023 1:15 PM IST)
t-max-icont-min-icon

கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 7 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறப்புக்கு கள்ளச்சாராயம்தான் காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. கூறுகையில்,

"இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவரிடம், விவரத்தைக் கேட்டு அறிந்தோம். கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக சிலரை கைது செய்து விசாரித்து வருகிறோம். கள்ளச்சாராயம் தொடர்பாக பல இடங்களில் சோதனை செய்து, முக்கியமான ஆதாரங்களைச் சேகரித்துள்ளோம். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் வீடுகளில் காலியான மது பாட்டில்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன." என தெரிவித்தார்.

இதற்கிடையில் அரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 7 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். இவர்கள் 7 பேரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்துவந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், கைவிடப்பட்ட தொழிற்சாலை ஒன்றில் வைத்து தயாரிக்கப்பட்ட 200 கள்ளச்சாராய பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 14 காலி டிரம்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story