2 இளைஞர்களை திருமணம் செய்து கொள்ள விண்ணப்பித்த ஒரே பெண்..! அதிகாரிகள் அதிர்ச்சி
ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைச் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பி அந்த பெண் இரண்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்.
கொல்லம்:
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள இரண்டு சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகங்களில் ஒரு பெண் திருமணத்திற்காக இரண்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்.
ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைச் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பி அந்த பெண் இரண்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்.
கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண். பத்மநாபபுரத்தில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இந்த பெண், பத்தனாபுரம் சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்த்தில் ஜூன் 30 ந்தேதி , "சிறப்பு திருமண சட்டத்தின் கீழ்" பத்தனாபுரத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்வதற்காக மனு கொடுத்து உள்ளார்.
அதேபோல் புனலூர், உறுகுந்நு பகுதியை சேர்ந்த இன்னொரு இளைஞரையும் திருமணம் செய்வதற்காக புனலூர் சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் ஜூலை 13 ந்தேதி அதே இளம்பெண் மனு அளித்திருக்கிறார்.
ஒரே இளம்பெண், இரண்டு இளைஞர்களை ஒரே சமயத்தில் திருமணம் செய்துகொள்ள, இரண்டு ரெஜிஸ்ட்ரார் அலுவலகங்களில் மனு தந்திருப்பது அதிகாரிகளின் ஆய்வின்போது தெரியவந்துள்ளது.
வழக்கமாக, திருமண விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுவதால், இந்த விஷயம் தெரியவந்துள்ளது. இதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாப்பிள்ளை பெயரை திரும்ப திரும்ப சரிபார்த்தனர். ஆனாலும் 2 ஆண்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதனை கண்டறிந்த புனலூர் சார் பதிவாளர், அந்த பெண்ணின் விண்ணப்பத்தை பத்மநாபபுரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். பிறகு, வெவ்வேறு ஆண்களின் பெயரை குறிப்பிட்டு திருமணத்திற்கு விண்ணப்பித்தது குறித்து, விவரம் கேட்பதற்காக அந்த பெண்ணை பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் வரவழைத்திருந்தனர்.
அதன்படியே அந்த பெண், புனலூரை சேர்ந்த இளைஞருடன் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து விளக்கம் தந்தார். அதாவது, புனலூரை சேர்ந்த இளைஞருடன் நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தாராம். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, அந்த இளைஞரிடம் இருந்து பிரிந்து, தன்னுடைய அம்மா வீட்டுக்கே சென்றுவிட்டார்.
அந்த நேரத்தில்தான், அந்த பெண்ணுக்கு பத்மநாபபுரத்தை சேர்ந்த இன்னொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளைஞர் ஒரு வெள்ளை பேப்பரில், தன்னை கையெழுத்து போட வைத்ததாகவும், அது தான் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயரில் கொடுக்கப்பட்ட திருமண விண்ணப்பம் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
ஆனால் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலக தரப்பில், அந்த பெண் சொல்வது நம்பத்தகுந்ததாக இல்லை என்கிறார்கள். அந்த பெண் சொல்லும் 2 ஆண்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்திக்க வேண்டும் என்றும், இதற்காக பத்மநாபபுரம் மற்றும் புனலூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வெவ்வேறு நாட்களில் வருமாறும் தெரிவித்துள்ளனர். அந்த இளம்பெண்ணையும், 2 இளைஞர்களையும், நேரில் அழைத்து விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.