காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு: முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
காவிரி விவகாரத்தில் சமரசம் கிடையாது என்றும், ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்படும் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு:
தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் கர்நாடகம், தமிழகம் இடையே காவிரி நீர் பிரச்சினை தலைதூக்குகிறது. காவிரி நீர் பிரச்சினையை தீர்க்க காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி படுகையில் உள்ள அணைகளின் நீர் இருப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் இவ்வாண்டு கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) உள்பட 4 அணைகளில் போதுமான நீர் இல்லை.
இதற்கிடையே 2 முறை காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்பேரில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றும் காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 6,075 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இதற்கு விவசாயிகள் சங்கத்தினர், கன்னட அமைப்பினர், பா.ஜனதாவினர், ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மண்டியா, பெங்களூரு உள்பட பல இடங்களில் முழுஅடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் காவிரியில் 28-ந் தேதி(இன்று) முதல் அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரை 18 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூறி கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடக ஆட்சியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற மலை மாதேஸ்வரா கோவிலுக்கு நேற்று முதல்-மந்திரி சித்தராமையா வந்தார். அவர் கர்நாடகத்தில் பலத்த மழை பெய்ய வேண்டி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோவில் வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நீர் ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு காவிரியில் நாளை(இன்று) முதல் அடுத்த மாதம்(அக்டோபர்) 15-ந் தேதி வரை 18 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளோம்.
இதுதொடர்பாக நான் கர்நாடக சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து உள்ளேன். அப்போது இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க எங்களிடம் நீர் இல்லை. காவிரி நீர் பங்கீடு விஷயத்தில் எந்தவித சமரசமும் கிடையாது.
இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
இதுபற்றி கர்நாடக அதிகாரிகள் கூறுகையில், 'கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. காவிரி படுகையில் உள்ள 4 அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லை. இதனால் கர்நாடக மக்களுக்கு குடிநீர் கூட வழங்க முடியாமல் கர்நாடக அரசு தவித்து வருகிறது. கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் கர்நாடகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது' என்றனர்.