அரசியல் சுயநலத்திற்காக யார் வேண்டுமானாலும் பெட்ரோல், டீசல் இலவசம் என அறிவிக்கலாம் - பிரதமர் மோடி


அரசியல் சுயநலத்திற்காக யார் வேண்டுமானாலும் பெட்ரோல், டீசல் இலவசம் என அறிவிக்கலாம் - பிரதமர் மோடி
x

Image Courtesy: ANI

இலவச பெட்ரோல் என்பது வரி செலுத்துவோர் மீது சுமையை அதிகரிக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

அரியானாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 900 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். காணொளி மூலம் நடைபெற்று வரும் விழாவில் அரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமும் 100 கிலோ லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்படும் என்பதால் 1 லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது :

இயற்கையை வழிபடும் நம் நாட்டில் இயற்கையைப் பாதுகாப்பதில் உயிரி எரிபொருள் முக்கியமானது. இதை நம் விவசாயிகள் நன்றாக புரிந்து கொள்கிறார்கள். நமக்கு உயிரி எரிபொருள் தான் சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் பசுமை எரிபொருள்.

புதிய உயிரி எரிபொருள் ஆலைகள் அமைக்கப்படுவதால் வேலைவாய்ப்பு உருவாகும் . இதனால் அனைத்து கிராம மக்கள், விவசாயிகள் பயனடைவார்கள். இது நாட்டில் மாசுபாடு சவால்களை குறைக்கும்.

தங்கள் அரசியல் சுயநலத்திற்காக யார் வேண்டுமானாலும் பெட்ரோல், டீசல் இலவசம் என்று அறிவிக்கலாம். இத்தகைய நடவடிக்கைகள் நம் எதிர்கால சந்ததியினரின் உரிமைகளைப் பறித்து, நாடு தன்னிறைவு பெறுவதைத் தடுக்கும். இது நாட்டின் வரி செலுத்துவோர் மீது சுமையை அதிகரிக்கும்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.


Next Story