ஓடிடி தளங்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்கள் கட்டாயம் - மத்திய அரசு
ஓடிடி தளங்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமான திரைத்துறையிலும் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஓ.டி.டி. தளம் என்ற புதிய தொழில்நுட்பத்துக்கு மிகுந்த வரவேற்பு ரசிகர்களிடையே இருக்கிறது.
இந்த நிலையில், ஓடிடி தளத்தில் இனி வெளியாகும் படங்களில் புகைப்பிடித்தல், புகையிலை பொருள்கள் வரும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மீறும் படக்குழு மீது மத்திய சுகாதாரம் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், தொடக்கத்திலும் நடுவிலும் குறைந்தபட்சம் முப்பது வினாடிகள் நீடிக்கும், புகையிலை எதிர்ப்பு சுகாதார இடத்தைக் காண்பிக்க வேண்டும். புகையிலை பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் போது அல்லது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவற்றின் பயன்பாட்டின் போது, திரையின் அடிப்பகுதியில் ஒரு முக்கிய நிலையான செய்தியாக புகையிலை எதிர்ப்பு சுகாதார எச்சரிக்கையை அவர்கள் காண்பிக்க வேண்டும். தியேட்டர் பின்பற்றும் விதிகள் ஓடிடி இயங்குதளங்களுக்கும், வரைவு அறிவிப்பின் படியும் பொருந்தும்.
ஓடிடி தளங்களில் புகையிலை எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்வது பற்றி மத்திய சுகாதார அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிப்பரத்துறை அமைச்சகத்துடன் அண்மையில் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.