டெல்லியில் நடந்த கொடூர விபத்து: இளம்பெண் மது அருந்தி இருந்ததாக தோழி தகவல்
ன் தோழி காருக்கு அடியில் மாட்டினார். அவர் அலறினார். கூச்சலிட்டார். ஆனால் அவர்கள் காரை முன்னும் பின்னும் நகர்த்திவிட்டு வேகமாகச் சென்றனர்.
புதுடெல்லி:
டெல்லியில் காரில் 13 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவருடன் பின்னால் அமர்ந்து வந்த தோழி ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்தவர் அஞ்சலி சிங் (20). கடந்த ஜனவரி 1-ம் தேதி அதிகாலையில் இவர் சென்ற ஸ்கூட்டியின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, காரின் அடியில் சிக்கிக்கொண்ட அஞ்சலி 13 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் அஞ்சலி சிங்கின் தோழி நிதி அளித்தப் பேட்டியில், "நானும் எனது தோழியும் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தோம். வண்டியை அவர்தான் ஓட்டினார். திடீரென நாங்கள் சென்ற வண்டியின் மீது அந்தக் கார் மோதியது.
நான் பக்கவாட்டில் விழ. என் தோழி காருக்கு முன்னால் சிக்கிக் கொண்டார். காரில் இருந்தவர்களுக்கு யாரோ சிக்கிக் கொண்டனர் என்று தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் தெரிந்தும் அவர் மீது காரை ஏற்றினர். இதில் என் தோழி காருக்கு அடியில் மாட்டினார். அவர் அலறினார். கூச்சலிட்டார். ஆனால் அவர்கள் காரை முன்னும் பின்னும் நகர்த்திவிட்டு வேகமாகச் சென்றனர்.
அவள் முதுகு தரையில் இருந்தது. அவள் கால் எதிலோ சிக்கிக் கொண்டது.அதனால் அவளால் தப்பிக்க முடியவில்லை. அவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்றனர். நடந்ததைப் பார்த்து நான் நம்பிக்கையிழந்துவிட்டேன். வீடு திரும்பினேன். நான் அழுது கொண்டே இருந்தேன். மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்தேன் " என்று கூறியுள்ளார்.
நிதி அளித்தப் பேட்டியில் அஞ்சலி மது அருந்தியிருந்தார் என்றும் அதனால் வண்டியை அவரை ஓட்ட வேண்டாம் என்று கூறியதாகவும் அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் டெல்லி தேசிய மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது டுவிட்டர் பக்கத்தில்," தன் தோழி விபத்தில் சிக்கியதைப் பார்த்தும் அவருக்கு உதவாமல் வீட்டுக்குச் சென்ற நிதி சொல்லும் வார்த்தைகள் எப்படி நம்புவது. நிதி சொல்லியதுபோல் அஞ்சலி மது அருந்தியிருந்தாரா என்றும் தெரியவில்லை. ஆனால் அவர் இறந்தபின்னர் இதனையெல்லாம் நிதி சொல்வது அஞ்சலியின் நடத்தையை படுகொலை செய்வதற்கு சமம். STOP VICTIM SHAMING!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தனது மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சலியின் தாயார் சந்தேகத்தை எழுப்பினார். அதைத் தொடர்ந்து உயிரிழந்த அஞ்சலியின் பிரேத பரிசோதனை மவுலானா மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. அதில், அவரது உடலின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை. எனவே, பாலியல் துன்புறுத்தலுக்கு அவர் ஆளாக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.